* பசறை பிரதேச சபை தலைவர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு இல்லாமலே கடந்த 2004 ஊவா மாகாண சபைத் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பொதுஜன ஐக்கிய முன்னணி, இம்முறையும் அமோக வாக்கு வித்தியாசத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் என பசறை பிரதேச சபைத் தலைவர் ஆனந்த டீ.எம். சில்வா தெரிவித்தார்.
பசறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேலும் அவர் உரையாற்றுகையில்;
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை வடமத்திய சப்ரகமுவ தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
தற்பொழுது ஊவா மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்திருப்பதால் மாகாண சபையை கைப்பற்றிவிடலாமென ஐக்கிய தேசியக்கட்சியினர் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. காரணம் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் போட்டியிட்டது. ஆனால், பொதுஜன ஐக்கிய முன்னணியே ஊவா மாகாண சபையைக் கைப்பற்றியது.
அதேபோல் இம்முறை நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் பொதுஜன ஐக்கிய முன்னணியே கைப்பற்றும். பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் கடந்த காலங்களைவிட இம்முறை அதிகமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கே கிடைக்கும். காரணம். அந்தளவுக்கு மலையகப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. கமநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக தோட்டப்பகுதிகளில் தற்பொழுது பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மலையக மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கே வாக்களிப்பார்கள் என்றார்.
உறுப்பினர் ஆர்.எம். திஸநாயக்க தமதுரையில்;
மக்கள் விடுதலை முன்னணியினருக்கு சப்ரகமுவ, வடமத்திய மக்கள் நல்லதொரு பாடத்தை மாகாணசபைத் தேர்தலில் புகட்டியுள்ளனர்.
ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த பேசிய வீண் பேச்சுக்கள் எல்லாம் எங்கே? எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. பொலநறுவை மாவட்டத்தில் ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களும் முக்கியஸ்தர்களும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயல்பட்டதுடன் எமது கட்சிக்கே வாக்களித்தனர்.
தற்பொழுது பல்கலைக்கழக மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டங்களிலும் தேவையற்ற விடயங்களிலும் ஈடுபட வைத்து தமது அரசியலை நடத்துவதற்கு ஜே.வி.பி.யினர் முனைகின்றனர். இதனால், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் ஐந்து வருடத்தில் பெறவேண்டிய பட்டங்களை 7 வருடத்தில் பெற வேண்டிய நிலையும் மாணவர்களுக்கு ஏற்படும். இதனால், பாதிக்கப்படுவது ஜே.வி.பி.யினர் அல்ல பல்கலைக்கழக மாணவர்கள் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.