* ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம்
எமது நாட்டில் உருவாகியுள்ள ஆயுதக்கலாசாரத்தினால் மலையகத்தில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் வாழுகின்ற மூவின மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை வெகுவாக குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ள ஊவா மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளருமான க.வேலாயுதம் இந்நிலையில் வன்முறையற்ற ஒரு சமூகத்தில் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்பதுடன், மனித உயிர்களுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பதுளை பவர் நிறுவனம் பிலிக்ட்(ஊஃஐஇகூ)நிறுவனத்துடன் இணைந்து கொஸ்லந்தையில் நடாத்திய சமாதானத்தை வலுவூட்டும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது;
சமூகத்தில் நாம் தனித்து நின்று செயற்பட முடியாது. கூட்டாக இணைந்து தான் செயற்பட முடியும். இவ்வாறு கூட்டாக செயல்பட்டால் தான் நாம் எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். எமது உரிமைகளைப் பாதுகாத்தால், இது எங்களுடைய நாடு, இந்த நாட்டில் ஏனையோருக்கு இருக்கிற சகல உரிமைகளும் எங்களுக்கும் இருக்கிறது என அழுத்திக்கூற முடியும்.
எங்களை சீண்டினால் ஓடிவிடுவதற்கு நாம் இன்னும் சிறுவர்கள் அல்ல. இது எம்முடைய மண். இதில் எமக்கு உரிமைகள் இருக்கின்றன என்று கூறக்கூடிய இளைஞர்களாக மாற வேண்டும்.
நாம் எப்போதும் ஏனைய சமூகத்திற்கு அடிமைப்பட்டவர்களாக வாழ முடியாது. எமக்கான கௌரவம், தனித்துவம் காணப்பட வேண்டும். இன்று அல்லது இன்னும் 20 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எமது மலையகத்திற்கு உரித்தான அல்லது எமக்கே உரித்தான உரிமைகள், கலாசாரங்கள் மற்றும் விழுமியங்கள் பேணப்பட வேண்டும்.
நாம் இந்த சமூகத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் அனைவராலும் அங்கீகரிக்கப்படக் கூடியவர்களாகவும் வாழ நினைக்க வேண்டும். அப்போது எமது நாடு அரசியல், பொருளாதார, சமூக மேம்பாடடைய முடியும்.
இவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் எமது நாடு ஒரு முழுமையான ஜனநாயக நாடு என்ற அந்தஸ்த்தைப் பெறும்.
பெருந்தோட்டப்புற மற்றும் கிராமப்புற மக்களைப் பொறுத்தவரையில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று எமது நாட்டில் உருவாகியுள்ள பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு முன் நாம் நம்மிடையில் காணப்படும் அடிமட்டப் பிரச்சினைகளை அறிந்திருக்க வேண்டும்.
இது இவ்வாறு இருக்க சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பல பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் மாத்திரம் அனுபவிக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் பாதுகாப்புப் பிரச்சினை எமது நாட்டை எடுத்துக் கொண்டால் சுதந்திரமாக ஓரிடத்திற்கு சென்று வர முடியாமல் இருக்கின்றோம்.
இளைஞர்களை வெளியிடங்களுக்கு அனுப்பினால் அவர்கள் வரும் வரை நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அதே போல் பெண்களும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவதனால் வாழ்க்கையில் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தன்னுடைய வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் நிலையில் சில பெண்கள் வாழ்கின்றார்கள். இது தான் தற்போது எமது அரசியல் நிலைப்பாடாகும்.
இவ்வாறான அப்பட்டமான நிலையினை இளைஞர்களாலே தகர்த்தெறிய முடியும்.இன்று எத்தனையே பேர் எம்மில் சிலரை வைத்துக்கொண்டு குளிர்காய்கிறார்கள். இந் நிலை மாற வேண்டும். அவ்வாறாயின் எமது வாக்குகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்றார்.
எனவே உங்களுடைய குடும்பத்தை சமூகத்தை புத்தி ஜீவிகளாக மாற்றி அவர்களை சிந்திக்க வைத்து வெறுமனே தங்களுடைய வாக்குகளை ஏலத்தில் விற்காமல் சரியான தீர்மானம் எடுத்து சிறந்த தலைமைத்துவத்தை எமது சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அங்கு உரை நிகழ்த்திய ஊவா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளரான நடேசன் சுரேஷ் தெரிவிக்கையில் எமது நாடு ஒரு நிலையற்ற போக்கில் காணப்படுகிறது. பெரிதும் வன்முறைகளுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கப்படுவது இளைஞர்களே. அதே போல நாட்டின் நிலையினை அறிந்தவர்களும் இளைஞர்களாகிய நீங்களே.
இதனால் தற்போது இவ்வாறான முகாமானது காலத்திற்கு பொருத்தமானது. காலத்தின் தேவையறிந்து பவர் நிறுவனம் செய்துள்ள இம் மூன்று நாள் செயலமர்வு மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் இங்கு சிங்கள, தமிழ்,முஸ்லிம் இளைஞர்கள் குழுமியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எமது சமூகத்தில் மாத்திரமல்லாது இவ்வாறன நிகழ்ச்சிகளை ஏனைய எல்லாப் பாகங்களிலும் நடத்த வேண்டும். இதுவே எனது அவா என்று தெரிவித்தார்.