பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தகறம்பளையில் 26 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த விவசாயக் காணிகளில் மீண்டும் விவசாயம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் மாகாண அமைச்சர்கள் தகறம்பளை காணியின் உரிமையாளர்கள் ஏனைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
1982 ஆம் ஆண்டு தகறம்பளையில் 7 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து 4 ஆயிரத்து 872 ஏக்கர் விவசாயக் காணிகள் விவசாயம் செய்யப்படாமல் கைவிடப்பட்டிருந்தன. இக்காணிகள் அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, நிந்தவூர் பிரதேச மக்களுக்கு சொந்தமானவையாகும். கிழக்கில் தற்போது நிலவும் சுமுக நிலை காரணமாக இப்பகுதியில் விவசாயம் செய்யக் கூடிய சூழ்நிலை காணப்படுவதால் விவசாயிகள் ஒன்றிணைந்துஅமைச்சர் உதுமாலெப்பையின் கவனத்திற்கு கொணர்ந்ததையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகறம்பளை காணி விவசாய அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ. அப்துல் கபூர் தெரிவித்தார்.
இங்கு விவசாயம் செய்வதற்கான சாத்தியப்பாடுகளையும் தேவைகளையும் கண்டறிந்து அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் கோரியிருப்பதாகவும் அதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையின் பிற்பாடு விவசாயம் செய்வதற்கான உத்தரவாதம் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் தகறம்பளை விவசாயிகள் பெரிதும் நன்மையடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.