தேசிய சேமிப்பு வங்கியில் முகாமைத்துவ உதவியாளர் பயிலுநர்களை சேர்த்துக்கொள்வதற்காக கொழும்பில் மட்டும் நடாத்தும் போட்டிப் பரீட்சைக்கு யாழ். மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்த 15 இற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் கொழும்பு செல்வதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவேயுள்ளது.
நேற்று முன்தினம் மாலை பரீட்சை எழுதச் செல்பவர்களின் பெயர் விபரங்கள், பயண அனுமதிக்காக யாழ். மாவட்ட வங்கியாளர் சங்க செயலாளர் என். சிவரெட்ணத்தினால் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், இன்று 5 ஆம் திகதி நடைபெறவிருந்த இரு விமான சேவைகள் நடை பெறமாட்டாதென விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் காங்கேசன்துறை திருகோணமலை கப்பல் சேவையிலும் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் சென்று பரீட்சை எழுதமுடியாத நிலையே காணப்படுகிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில், பாதுகாப்புப் பிரிவினர் இப்பரீட்சார்த்திகளை விமானப்படை விமானத்தில் அனுப்பிவைத்தல் மட்டுமே இவர்கள் இப்பரீட்சைக்கு தோற்ற வாய்ப்புள்ளது.