வலிகாமம் மேற்குப்பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், கணினி, தொலைநகல் இயந்திரம், தளபாடக் கொள்வனவு போன்றவற்றுக்காக வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்துக்கு ஒரு இலட்சம் ரூபாவும்.தையல் இயந்திர கொள்வனவுக்காக பண்ணாகம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு ஒரு இலட்சம் ரூபாவும். தளபாடக் கொள்வனவுக்காக அராலி வடக்கு இந்து கலாசார இளைஞர் சன சமூக நிலைய முன்பள்ளிக்கும் சங்கானை தெற்கு சலேசியார் பெற்றோர்,ஆசிரியர் சமூக முன்பள்ளி, பல்லசுட்டி காந்திஜி சன சமூக நிலையம் ஆகியவற்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபாவும் அராலி முருகமூர்த்தி வித்தியாசாலைக்கு 50 ஆயிரம் ரூபாவும், ஒதுக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைக்குச் சீமெந்துத் தரை அமைப்பதற்காக அராலி இந்துக்கல்லூரிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் சுற்றுமதில் அமைப்பதற்காக சங்கானை ஸ்தான அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாவும் கட்டிடப்புனரமைப்புக்காக மூளாய் அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வகுப்பறைத்திருத்தம் மற்றும் மின்சார வசதிக்காக வட்டுக்கோட்டை சுப்பிரமணிய வித்தியாசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும் மலசலகூடம் அமைத்தலுக்காக வட்டுக்கோட்டை இந்து கல்லூரிக்கு 50 ஆயிரம் ரூபாயும் கணினிக் கொள்வனவுக்காக சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியா சாலைக்கு ஒரு இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.