* சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு
பல் வைத்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தாலும் அதற்கு செல்லாது தொழில் இல்லையென கூறுவதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டிருந்த மஹரகம பல் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட தாதியர் 100 பேருக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்;
எமது பல் வைத்தியர்களுக்கு தொழில் இல்லையென கூறியதும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலும் எமக்கு தேவையான இடங்களுக்கு அவர்கள் போகாது தொழில் இல்லையென கூப்பாடு போடுகின்றனர்.
இந்நிலையில், நாம் அதிகளவில் பல் வைத்தியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் தனியார் துறையில் ஈடுபடுத்தவுள்ளோம். இதற்கு காரணம், தனியார் துறையில் முழு நேர மருத்துவர்கள் இருந்தால் நாம் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
தனியார் மருத்துவமனைகளில் உள்ள வைத்தியர்களின் எண்ணிக்கை குறையும் நிலையில், இத்துறை சார்ந்த அரச ஊழியர்கள் விலகி பல் கிளினிக்கை ஆரம்பித்து சேவை வழங்குவதை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.