* அமைச்சர் பௌஸி தெரிவிப்பு
-எம்.ஏ.எம்.நிலாம்-
பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 35 வருட பழைமைவாய்ந்ததெனவும் தற்போது 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை மட்டுமே சுத்திரிக்க முடியும் எனவும் தெரிவித்த பெற்றோல், பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உதவியுடன் ஸ்தாபிக்கப்படவிருக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதும் ஒரு இலட்சம் பீப்பாயாக அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் பௌஸி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
இன்று 50 ஆயிரம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிப்பதற்கு 600 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. இந்த எண்ணிக்கையை ஒரு இலட்சம் பீப்பாய்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரான் சென்ற போதும் ஈரானிய ஜனாதிபதி இலங்கை வந்தபோதும் எட்டப்பட்ட முக்கிய விடயம் இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை புதிதாக அமைப்பதாகும். உடன்படிக்கையின்படி எரிபொருள் சுத்திகரிப்புக்கான செலவினம் 1500 மில்லியன் அமெரிக்கடொலரைத் தாண்ட முடியாது.
ஒரு சில ஊடகங்கள் தெரிவித்திருக்கும் செய்திகள் தவறானவையாகும். எந்த நடவடிக்கையும் முறைகேடாக மேற்கொள்ளப்படவில்லை.
அதேசமயம் இலங்கையில் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யும் திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் முதற்கட்டமாக 50 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த விலையில் அதாவது தற்போதைய சமையல் எரிவாயுவை விட 400, அல்லது 500 ரூபா குறைவாக சந்தைப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் இலங்கையில் உற்பத்தி செய்யும் எரிபொருளை வெளிநாட்டுக்கு விற்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. ஈரானுடன் உடன்படிக்கை செய்து கொண்ட போதிலும் அந்த நாட்டுக்கு எந்தவிதமான ஏகபோக உரிமையும் வழங்கப்படமாட்டாது அவர்கள் அப்படி எந்த உரிமையையும் கோரவுமில்லை.
எரிபொருள்விலையை தற்போதைய நிலையில் குறைக்க முடியாது. தற்போதும் கூட நாம் குறைந்த விலைக்கே எரிபொருளை சந்தைப்படுத்துகின்றோம். நட்டத்தை மாற்று வழிமூலம் நிவர்த்தி செய்கின்றோம். அதேசமயம் சர்வதேசசந்தையில் எரிபொருள் விலை மேலும் குறையுமென எதிர்பார்க்க முடியாது. அப்படி நடக்குமானால் விலைமாற்றம் குறித்து அரசு கவனத்தில் எடுக்கும்.