மேல் மாகாணத்திலுள்ள தோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல விசேட செயல் திட்டங்களை மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே நடைமுறைப்படுத்தவுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பினைச் செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியை உயர் மட்டத்திற்கு கொண்டு வரும் நோக்கில் முதலமைச்சர் மேல் மாகாண கல்வி அமைச்சிற்காக இம்முறை அங்கீகரிக்கப்பட்ட புறம்பான மதிப்பீட்டில் முதல் முறையாக களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் உள்ள 43 தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 300 இலட்சத்தை ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் இதன் ஒதுக்கீடுகளை பயன்படுத்தி தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு செயல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இது தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இச் செயல் திட்டத்தின் மூலம் மேற்படி பாடசாலைகளின் அபிவிருத்திக்காக மேலும் 30 மில்லியன் ரூபா பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் டிசம்பர் மாத அளவில் தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக ரூபா 6 கோடி ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.