கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றியம் நடத்தும் வேல்நடை பஜனை செப்டெம்பர் 9 ஆம் திகதி காலை மேன்காமம் மருதநகர் ஸ்ரீமுருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி செப்டெம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் நிறைவுபெறும்.
பஜனை ஆரம்பத்தில் பூஜை வழிபாடு, மேன்காமம் முருகன் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சி. ஜெயக்குமார் அருளாசி வழங்கும் நிகழ்வு இடம்பெறும். ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரும் சமயப் பணிப்பாளருமான க.தயானந்தகுரு வேல்நடை பஜனையை ஆரம்பித்துவைப்பார்.
கிராமங்கள் தோறும் சமய விழிப்புணர்வையும் இறை நம்பிக்கையையும் ஏற்படுத்துமுகமாகவும் எமது மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்ப துயரங்களிலிருந்து நீங்குமுகமாகவும் வேல்நடை பஜனை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் பஜனையில் அனைவரும் பங்குபற்றி இறைவனை வேண்டுதல் செய்யும்படி ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
செப்டெம்பர் 9 ஆம் திகதி மேன்காமம் முருகன் கோயிலிலிருந்து ஆரம்பமாகும் வேல்நடைபஜனை, அபிராமி அம்மன் கோவில், மல்லிகைத்தீவு சிவன், வீரகத்திப் பிள்ளையார் ஆலயம், பெரியவெளி கதிரேசப்பிள்ளையார் ஆலயம், மணற்சேனை தங்கமுருகன் ஆலயம் ஆகியவற்றைத் தரிசித்து பட்டித்திடல் விநாயகர் கோவிலில் நிறைவுபெறும்.
செப்டெம்பர் 10 ஆம் திகதி பாலத்தடிச்சேனை முருகன் கோவிலிலிருந்து வேல்நடை பஜனை ஆரம்பமாகி முன்னம்போடி வெட்டை சித்திவிநாயகர் கோவில், நாராயணபுரம் நாராயணர் கோவில், பாரதிபுரம் புதுமை விநாயகர் கோவில், பாரதிபுரம் பாலவிநாயகர் கோவில் பாரதிபுரம், சிவன் கோவில், கிளிவெட்டி, மாரியம்மன் கோவில் ஆகியவற்றைத் தரிசித்து தங்கநகர் சண்பகவல்லி ஆலயத்தில் தங்கும்.
செப்டெம்பர் 11 ஆம் திகதி பஜனை அரிப்பு ஞான விநாயகர் கோவிலிலிருந்து ஆரம்பமாகும். பூநகர் மாரியம்மன் ஆலயம், பூமரத்தடிச்சேனை விநாயகர் கோயில் ஆகியவற்றைத் தரிசித்த பின்னர், பஜனைக் குழுவினர் ஈச்சிலம்பற்று சண்பக நாச்சி கோவிலில் தங்குவர்.
செப்டெம்பர் 12 ஆம் திகதி விநாயகபுரம் விநாயகர் கோவிலிலிருந்து பஜனை ஆரம்பமாகும். புன்னையடி விநாயகர் கோவில், கல்லடி மலைநீலியம்மன் கோயில், வாழைத்தோட்டம் விநாயகர் கோவில் ஆகியவற்றைத் தரிசித்த பின்னர் பஜனைக் குழுவினர் வெருகல் முகத்துவாரம் சூரநகர் விநாயகர் கோயிலில் தங்குவர்.
மீண்டும் செப்டெம்பர் 13 ஆம் திகதி முத்துச்சேனை, வட்டவான், மாவடிச்சேனை ஆகிய இடங்களில் உள்ள விநாயகர் ஆலயங்களைத் தரிசித்து பின்னர் பஜனைக் குழுவினர் மாலையில் வெருகலம்பதி முருகன் ஆலயத்தினைச் சென்றடையும்.