ஹல்தும்முல்லை நீட்வூட் குரூப் நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் மூன்று நாள் பணி நிறுத்தப் போராட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை நிறைவுக்கு வந்ததாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தொழிலுறவு அதிகாரியும், அப்புத்தளை பிரதேச சபை உறுப்பினருமான சிவலிங்கம் சிற்றரசு தெரிவித்துள்ளார்.
மேற்படி தோட்டம் அரச பெருந்தோட்ட யாக்க நிறுவனத்திலிருந்து 36 வருட குத்தகைக்கு 1987 ஆம் ஆண்டில் பெறப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் அத்தோட்ட நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டு அதே தோட்டத்தை மீண்டும் அரச பெருந்தோட்ட யாக்கத்திடம் கையளிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஆறு நாட்கள் தொழில் வழங்க வேண்டும், நோய் கண்டவர்களுக்கு மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதி, சிறுவர் பராமரிப்பு நிலைய சீர்திருத்தம், தாம் கடமை செய்யும் கொழுந்து மலைகளின் சீர்திருத்தம், வேறு தோட்டப் பிரிவுகளுக்கு தொழிலுக்காக இடமாற்றுவது நிறுத்தப்படல் வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து அங்கு வாழ் 85 தொழிலாளர்களும் முன்வைத்தனர்.
இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று அப்புத்தளை பிரதித் தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
உதவித் தொழில் ஆணையாளர் திருமதி சந்ரா அபேசிங்க தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எஸ்.சிற்றரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலுறவு அதிகாரி கே.கோப்பெருஞ்சோழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டதுடன் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பின் படி வழங்கபட வேண்டிய நிலுவைப் பணம் எட்டு மாதங்களுக்கும் வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.
தலா 2 ஆயிரம் ரூபாப் படி இத்தொகை 85 தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.