பசறை மாத்தன்னை தோட்டக்குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுபெற்று ஒரு வருடமாகியும் மின்னிணைப்புகள் வழங்கப்படாதுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
அரசியல் வாதிகளிடையே இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இழுபறி நிலையே இந்த இழுபறி நிலைக்கு காரணமென்று கூறப்படுகின்றது.
2007 ஆம் ஆண்டு அமைச்சர் டிலான் பெரேராவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாத்தன்னை தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இரு பிரிவுகளாக வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
இந்நிலையில், மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் இத் தோட்ட மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்குமாரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கு அவசரக் கடிதமொன்றினையும் அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர், மின்சார சபைத் தலைவர், ஊவா மாகாண மின்சார சபை பிரதி முகாமையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மின்சாரம் வழங்கும் ஏற்பாடுகள் நிறைவுற்றிருக்கும் தோட்டங்களுக்கு மின்னிணைப்புகளை வழங்குவதற்குத் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.