*பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
""பௌத்த தர்மத்திற்கும் மதத்திற்கும் சங்கடத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் இனவாத துறவிகளின் மஞ்சள் காவி உடை கலைக்கப்பட்டு அவர்களது குடியுரிமையை பறித்தெடுப்பதன் மூலமே பௌத்த குருமாரின் அட்டகாசங்களை ஒழிக்க முடியும். இந்துக்கோவிலில் விசமிகளுடன் புகுந்து சிலைகளை உடைத்து தனது மேதாவித்தனத்தைக் காட்டிய கிராண்ட்பாஸ் துறவிக்கு சட்டநடவடிக்கை மட்டுமல்ல, அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' இவ்வாறு வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் வீதி டிமெல்வத்தை குடியேற்ற திட்டத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவிருந்த கோவிலில் புகுந்து சிலைகளை சேதமாக்கிய மத குருமாரும் இரண்டு காடையர்களும் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதை அடுத்து ஸ்தலத்திற்கு சென்று சேதங்களைபார்வையிட்ட பிரதி அமைச்சர் அங்கிருந்த பக்தர்களையும் மக்களையும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுப்பதாக தெரிவித்தார். அத்துடன் மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் கடிதம் மூலம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது;
காவி உடைதரித்துக் கொண்டு காடைத்தனத்தில் ஈடுபடுவோருக்கு மதப்பெரியார்கள் விசாரணை நடத்தி அவர்களது மத நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து குடியுரிமையையும் சட்டபூர்வமாக பறிக்கப்படவேண்டும். டிமெல்வத்தை பகுதியில் சகல சமூக மக்களும் சந்தோஷமாகவும் ஐக்கியமாகவும் வாழும் பகுதி ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்த பௌத்த மதகுரு காடைத்தனத்தில் ஈடுபடுவதை எந்த சமூகமும் அனுமதிக்கக்கூடாது. தமிழ் மக்களின் மத உரிமைகளுக்கு தடை விதிப்பதற்கு இந்த காடைத்தனம் நிறைந்த பௌத்த பிக்குவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
அரசாங்கத்திற்கு இப்படியானவர்களின் அநாவசிய அட்டூழியம் நிறைந்த செயல்களே பெரும் சங்கடங்களை ஏற்படுத்திவருவதை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். இன வன்மங்களை யார் தூண்டினாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதன் மூலமே வன்முறை கலாசாரத்திற்கும் தான் தோன்றித்தனமான இனவாதப்போக்குடன் நடந்து கொள்ளும் சில பௌத்த குருமார்களுக்கும் தகுந்த பாடம் புகட்டமுடியும்.
யுத்தத்தாலும் பொருளாதார சுமைகளினாலும் கடத்தல், கைதுகள் உட்பட பலவித இன்னல்களை அனுபவித்துவரும் தமிழ் மக்களின் நிம்மதியான பிரார்த்தனைகளையும் கோவில் வளங்களையும் தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கக்கூடாது.