* சுட்டிக்காட்டுகிறது ஐ.தே.க.
-எம்.ஏ.எம்.நிலாம்-
நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முழு நாடும் பாரிய கடனுக்குள் தள்ளிவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
வரலாற்றில் முன்னொரு போதுமில்லாத வகையில் நாட்டின் பணவீக்கம் மோசமான நிலையில் அதிகரித்திருக்கின்றது. பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்து காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
இன்றைய அரசாங்கம் நாட்டை முழுமையாக கடனுக்குள் தள்ளியுள்ளது. ஏற்கனவே கோடிக்கணக்கான ரூபாவுக்கான பண முறிகள் பெறப்பட்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. வெளிநாட்டு உதவியாக 230 மில்லியன் அமெரிக்க டொலரை குறுகிய கால கடனாக பெற்றுள்ளது. இப்போது மீண்டும் 70 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
இந்தளவு பெரிய கடன்களைப் பெற்ற நிலையிலும் அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.அரசாங்கத்தின் சீரற்ற பொருளாதார, நிதிக் கொள்கை காரணமாக நாட்டு மக்கள் கடன்காரர்களாக்கப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்குமிடையில் சமையல் எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2006 டிசம்பரில் 750 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை இன்று 1863 ரூபாவாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்வை தாங்கிக் கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவை அனைத்துக்கும் அரசாங்கம் உலகச் சந்தையை காரணம் காட்ட முற்படுகின்றது. உலக சந்தை நிலைமை மட்டும் எமது நாட்டைப் பாதிக்கவில்லை. அரசாங்கத்தின் நிதி, பொருளாதார முகாமைத்துவம் ஒழுங்காகப் பேணப்படாமை தான் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாகும்.
அரசாங்கத்தின் இயலாமையை யுத்தத்தைக் காண்பித்து மூடி மறைக்கும் முயற்சிகள் தான் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு யுத்தத்தைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்ற முடியும் எனக் கேட்க விரும்புகின்றோம்.
கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட எந்த உத்தரவாதமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அடுத்த பட்ஜெட் சமர்ப்பிக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த நவம்பரில் எத்தகைய மாயாஜாலங்களைக் காட்டி வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைக்கப் போகிறார்.
பொய் வாக்குறுதிகளால் நாட்டைத் தொடர்ந்து அழிவுக்குள் இட்டுச் செல்லாமல் இயலாமையை ஏற்றுக் கொண்டு ஆட்சியிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் ஒன்றுபட்டு ஆட்சியைக் கவிழ்த்திவிடுவர் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.