* பிக்கு, இரு உதவியாளர்கள் கைது
கொழும்பு, கிராண்ட்பாஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தினுள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை புகுந்த சிலர், தெய்வச் சிலைகளை உடைத்தெறிந்துள்ளனர்.
இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக கோயிலின் அருகிலுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவரும் அவரது இரு உதவியாளர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
கிராண்ட்பாஸ் டிமெல் வத்தையிலுள்ள (கெத்தாராம விளையாட்டரங்கிற்கு அருகில்) ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கான பணிகளில் ஈடுபட்டவர்கள் நள்ளிரவு 12 மணியளவில் அந்தப் பணிகளை முடித்துக் கொண்டு சென்ற பின் அதிகாலை 1.30
மணியளவில் கோயில் வளாகத்தினுள் புகுந்த மூவர் கோயிலின் சிறிய கோபுரத்தில் (விமானம்) ஏறி மூலஸ்தானத்திற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த தெய்வச் சிலைகளை இடித்து உடைத்ததுடன் மின் விளக்குகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
சத்தங்கள் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் அங்கு ஓடி வரவே, நாசவேலைகளில் ஈடுபட்டிருந்த மூவரும் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள விகாரைக்குள் புகுந்துள்ளனர்.
கோயிலுக்குச் சென்ற இளைஞர்கள் உடனடியாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கும் "119' அவசரப் பொலிஸாருடனும் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரியப்படுத்தவே அவர்கள் அங்கு வந்துள்ளனர்.
அருகிலுள்ள விகாரையிலிருந்து வந்தவர்களே கோயில் கோபுரப் பகுதியில் தெய்வச் சிலைகளை உடைத்ததாகக் கூறிய இளைஞர்கள் அந்த இடத்திற்கு பொலிஸாரைக் கூட்டிச் சென்று காண்பித்துமுள்ளனர்.
அம்மன் சிலையின் முகமும் கைகளும் காலும் உடைக்கப்பட்டிருந்ததுடன் விஷ்ணு சிலையும், இராமர் சிலையும் உடைத்துச் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சிவலிங்கம் உடைத்து தலை கீழாகக் கவிழ்க்கப்பட்டிருந்தது.
இளைஞர்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து விகாரைக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்தவர்களை வெளியே கொண்டு வந்து விசாரித்த போது இருவர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறவே அவர்கள் இருவரையும் பிடித்த பொலிஸார் விகாரைப் பிக்குவிடம் சென்று இது பற்றி விசாரித்துள்ளனர். எனினும் அவர், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதெனக் கூறிவிட்டார்.
இவ்வேளையில் அந்தப் பிக்குவின் முதுகில் ஏற்பட்ட கீறல் காயத்திலிருந்து இரத்தம் வருவதை அவதானித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் அதனைக் காட்டி அவருக்கும் இதில் தொடர்பிருப்பதாகக் கூறவே அவரையும் அவரது உதவியாளர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார் மூவரையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்து அவ்விடத்தில் பெருமளவு மக்கள் கூடி விட்டனர். இதுபற்றி கட்சித் தலைவர்களுக்கும் கோவில் நிர்வாகம் அறிவிக்கவே பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், மாநகரசபை உறுப்பினர்களான கே.ரி.குருசாமி, ஏணி எஸ்.இராஜேந்திரன், எஸ்.எம்.ஷியாம் ஆகியோர் அவ்விடத்திற்கு வந்து நிலைமைகளை அறிந்து கொண்டனர்.
மனோகணேசன் எம்.பி. இது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமை மோசமடையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அப்பகுதியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிக்குவும் அவரது உதவியாளர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மூவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அஜித் அனவரட்ண உத்தரவிட்டுள்ளார்.