யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை யாழ்நகரின் மத்தியில் வீடொன்றினுள் பெரும் கொள்ளை இடம்பெற்ற நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பருத்தித்துறை வீதி, நல்லூரிலுள்ள வீடொன்றினுள்ளும் நல்லூர் செட்டித்தெருவிலுள்ள இரு வீடுகளினுள்ளும் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பருத்தித்துறை வீதி, நல்லூரிலுள்ள வீட்டுக்குள் பின்புறம் திறந்திருந்த கதவொன்றினூடாக திடீரென நுழைந்த கொள்ளையர்கள் வீட்டுப்பெண் அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்ட நகைகளை அறுத்தெடுத்ததோடு இரு கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோன்று செட்டித்தெருவிலுள்ள இரு வீடுகளுக்குள்ளும் கொட்டன் பொல்லுகள், கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அந்த வீடுகளிலிருந்தும் நகைகள், பணம் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளனர்.
இக் கொள்ளைகள் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் இராணுவ முகாமிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.