வன்னியில் கடந்த 36 மணிநேரத்தில் நடைபெற்ற உக்கிர சமரைத் தொடர்ந்து காணாமல் போன பல படையினர் மீண்டும் திரும்பி வருவார்களென நம்புவதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
வன்னேரிக்குளம், ஆண்டான்குளம், அக்கராயன் நகர் மற்றும் நாச்சிக்குடாவுக்கு வடக்கே உட் பகுதிகளில் கடந்த 36 மணிநேரத்தில் கடும் சமர் நடைபெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் நடைபெற்ற தேடுதலின் பின்னரும் மேலும் பல படையினர் இதுவரை தங்கள் படையணிகளில் வந்து சேராமல் காணாமல் போயுள்ளனர்.
படையினரின் கடும் தாக்குதலுக்கு எதிராக புலிகளின் பதில் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இவர்கள் தந்திரமாக நகர்ந்து சென்றிருக்கலாம் அல்லது எதிரியின் தாக்குதலுக்கிலக்காகியிருக்கலாம்.
எனினும், இவர்களுக்கு என்ன நடந்ததென இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இவ்வாறு காணாமல் போன படையினர் மீண்டும் தங்கள் படையணிகளுடன் வந்து இணைந்து கொள்வார்களெனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்ற கடும் மோதலில் 75 படையினர் வரை கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 29 படையினரது சடலங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் கூறிய விடுலைப் புலிகள் அதில் 20 சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் படையினரிடம் ஒப்படைத்த நிலையிலேயே மேலும் பல படையினர் காணாமல் போயிருப்பதாக படைத்தரப்பு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.