* ஐ.நா.சபையின் பிரகடனத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய நிலைமையில் சர்வதேச சமூகம் இருக்கிறது. ஆனால், இதனைச் சர்வதேச சமூகம் எவ்வாறு கையாளும் என்பதுதான் கேள்விக்குறி
பி.ஆர்.நாயகம்
மனித உரிமை மீறல்களும், மனிதாபிமானப் பிரச்சினைகளும் ஒரு நாட்டில் கட்டுமீறிச் செல்லும் நிலையில் அந்நாட்டின் மீது தலையிடுவதற்கான உரிமை சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது. இதனை ஐ.நா.சபையே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு தலையீட்டை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கும் ஏற்படுமா?
இந்தக் கேள்வி கொழும்பில் எழுப்பப்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமானது - யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதென்ற முடிவை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்துக்கொண்டுள்ள பின்னணியில், வன்முறைகளும் மனிதாபிமானப் பிரச்சினைகளும் தீவிரமடையலாம் என சர்வதேச சமூகம் எச்சரித்திருந்தது. யதார்த்தமும் அவ்வாறாக உள்ளதைத்தான் அண்மைய நிகழ்வுகளும் உணர்த்துகின்றன. மனித உரிமைகள் நிலைமைகளைக் கண்காணிப்பதற்காக ஐ.நா.சபையின் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேசம் முன்வைத்தமைக்கும் அதுவே காரணம்.
இந்தக் கோரிக்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் நிலையைக் கண்காணிப்பதற்காக ஐ.நா.சபையின் கள நிலையங்கள் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா.வின் ஒரு தலையீடாகவே அரசாங்கமும், பேரினவாத அமைப்புகளும் கருதுகின்றன. யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கும் நிலையில், மனித உரிமைகள் மீறல்களுக்குச் `சாட்சிகள்' இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
சாட்சிகளற்ற இந்த நிலை மனித உரிமை மீறல்கள் மோசமடைவதற்கு வழிவகுப்பதாகவே அமையும் என சர்வதேச சமூகம் கருதுகின்றது. இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்கு அல்லது கண்காணிப்பதற்கு சர்வதேச சமூகத்துக்கு உள்ள வழிதான் என்ன? இந்த இடத்தில்தான் `ஆர் 2 பி' எனப்படும் பாதுகாப்பதற்கான உரிமை பற்றிய சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் கவனம் செல்கின்றது. இது இலங்கை விடயத்திலும் கையாளப்படுமா என்ற கேள்வி பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தலையிடும் உரிமை
நினைவுச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்துவதற்காக கடந்த வருடம் வந்திருந்த அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கரத் இவான் கொழும்பில் தெரிவித்த கருத்துக்கள் தான் சர்வதேசத்தின் தலையீடு தொடர்பான அதிர்வுகளைக் கொழும்பு அரசியலில் முதன்முதலில் ஏற்படுத்தியது. இலங்கையின் நிலைமை சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவை விடவும் மோசமானதாகவுள்ளது என அப்போது தெரிவித்த அவர், இதனால் மனிதாபிமான ரீதியாகத் தலையிடுவதற்கான உரிமை சர்வதேச சமூகத்துக்குள்ளது எனத் தெரிவித்திருந்தார். அவரது உரையைத் தொடர்ந்தே ஆர் 2 பி தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் கொழும்பு அரசியலில் தொடர்கின்றது.
சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில் பாதுகாப்பதற்கான பொறுப்பு (Responsibility to Protect) என்பது வளர்ச்சியடைந்துவரும் ஒரு கருத்தாகும். ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கான சட்ட மற்றும் தார்மீக உரிமையை இது வழங்குகின்றது. ஒரு அரசு அந்நாட்டில் இடம்பெறக் கூடிய திட்டமிட்ட இன அழிப்பை, பாரியளவில் இடம்பெறும் கொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாததாக அல்லது கட்டுப்படுத்த விரும்பாததாக இருக்குமானால் அந்நாட்டின் மீது ஐ.நா. சபையின் மூலமாக சர்வதேச சமூகம் தலையிடலாம் என்பதுதான் இதன் அர்த்தம்.
தமது நாட்டவர்களைவிட ஏனைய நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியவையாகவே இப்போது அனைத்து நாடுகளும் உள்ளன. பூகோளமயமாக்கல் அம்சங்களில் இதுவும் ஒன்று. ஒரு நாடு அங்கு காணப்படும் மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு இயலாததாக அல்லது விருப்பமில்லாததாக இருந்தால், அதற்கான பொறுப்பு சர்வதேச சமூகத்திடம் சென்றடைகின்றது என்பதே இதன் (Responsibility to Protect) அர்த்தம்.
இராணுவத் தலையீடு?
ஒரு நாட்டின் மீது சர்வதேச அழுத்தம் அல்லது தலையீடு எவ்வாறு இடம்பெறலாம் என்பதையிட்டும் பார்ப்பது முக்கியம். உடனடியாகவே இராணுவ நடவடிக்கை என இறங்குவது எங்கும் சாத்தியமானதல்ல. அதனை நியாயப்படுத்தவும் முடியாது. அது ஒரு ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அதனால், இவ்வாறான தலையீடுகள் முதலில் இராஜதந்திர மட்டத்திலேயே ஆரம்பமாக வேண்டும். பேச்சுவார்த்தைகள் எனத் தொடர்ந்து அதுவும் வெற்றியளிக்காத பட்சத்தில் தடைகள் விதிக்கப்படும் நிலைமைக்குச் செல்லலாம். இவை பயன்படாத நிலையில் இறுதிக் கட்டமாக இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் நிலைக்கு சர்வதேச சமூகம் தள்ளப்படலாம்.
ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடுவதென்பது குறித்த நாட்டின் இறைமையை மீறும் ஒரு செயற்பாடு என்றே சர்வதேச அரசியலில் குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றது. ஒரு நாட்டின் சுயாதிபத்தியமும் இறைமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கைதான். இருந்த போதிலும், பாதுகாப்பதற்கான உரிமை என்ற கருத்து இதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு தேசமானது அந்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் பொறுப்பாக நடந்துகொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்படும் நிலையிலேயே அந்த நாட்டின் இறைமைக்கு மதிப்புக் கொடுக்கப்படும். இல்லையெனில், அந்த இறைமை கேள்விக்குறியாவது தவிர்க்க முடியாதது என்பதுதான் சர்வதேச அரசியல் கோட்பாடாகும்.
உதாரணமாக, ஈழப் பிரச்சினையில் 1987 இல் இந்தியா தலையிட்டமையைக் குறிப்பிடலாம். அப்போது இலங்கையின் வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய இந்திய வான் படையின் விமானங்கள், யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடிக்கொண்டிருந்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்களைப் போட்டன. இது உண்மையில் இலங்கையின் இறைமையை மீறும் ஒரு செயலாக இருந்தாலும், சர்வதேசம் இந்தியாவின் செயலை ஏற்றுக்கொண்டது. கொழும்புக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் அப்போது அணிதிரளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். 1 .இலங்கையின் வடபகுதி மீது ஏற்படுத்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக மக்கள் உணவுப் பொருட்களுக்கே கையேந்தும் நிலையில் இருந்தார்கள். அந்த நிலையில் அவர்களைப் பாதுகாப்பதற்கு என்ற பெயரிலேயே இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டது. 2.இந்தியாவின் பிராந்திய வல்லாண்மையை சர்வதேச சமூகம் அப்போதே ஏற்றுக்கொண்டிருந்தது. அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தது.
ஏற்கப்படும் தலையீடுகள்
உள்நாட்டு விவகாரத்தில் மற்றொரு நாடு தலையிடுவதென்பது இறைமையை மீறும் ஒரு செயலாகக் கருதப்பட்ட போதிலும், உலகின் மனச்சாட்சியை உலுக்கிய மனித இனப்படுகொலைகளின் பின்னர் இது ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகியது. குறிப்பாக றுவாண்டா படுகொலைகளின் பின்னர் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகியது. இதனைத் தொடர்ந்து கொசோவாவில் இனப்படுகொலைகளும், இனச் சுத்திகரிப்பும் தீவிரமடைந்த போது சர்வதேச சமூகம் உரிய வேளையில் இராணுவ ரீதியாகத் தலையிட்டது.
இவ்வாறான தலையீடுகளை எதிர்ப்பவர்களிடம் ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். `இவ்வாறான தலையீடு இறைமையை மீறும் ஒரு ஆக்கிரமிப்பு என்றால், றுவாண்டாவில் நடைபெற்றது போன்ற ஒரு பாரிய இன அழிப்பு இடம்பெறும் போது நாம் என்ன செய்ய முடியும்? இராணுவத் தலையீட்டை அங்கீகரிப்பதாகவே கொபி அனானின் இந்தக் கேள்வி அமைந்திருந்தது எனலாம்.
சர்வதேச ஒழுங்குமுறையில் பூகோளமயமாக்கல் பல மாற்றங்களைச் செய்திருக்கின்றது. இதன் மூலமாக நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டனவாகவே இருக்கின்றன. ஒரு நாட்டில் நடைபெறக்கூடிய கொடூரமான நிகழ்வுகளையிட்டு ஏனைய நாடுகள் அலட்சியம் செய்ய முடியாத ஒரு நிலை இதன்மூலமாக ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் மற்றைய நாடுகளின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பான சமூக உணர்வும் இப்போது அதிகரித்துச் செல்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக ஐ.நா. சபையின் வளர்ச்சி ஒவ்வொரு நாட்டுக்கும் சில கடமைப் பொறுப்புக்களைக் கொடுத்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். ஐ.நா.சபையின் மூலமாக உருவாக்கப்பட்ட சில பிரகடனங்கள் தான்தோன்றித் தனமாக நடக்க முடியாத ஒரு நிலைமையை தேசங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இனப்படுகொலைகளையோ அல்லது திட்டமிட்ட படுகொலைகளையோ ஐ.நா.சபை அனுமதிக்காது. இது கொள்கையளவில் உள்ள போதிலும் நடைமுறையில் வழமைபோல இதிலும் அரசியல் தலையீடுகளைக் காண முடியும்.
ஐ.நா.வின் பிரகடனம்
ஆனால், 2005 செப்டம்பரில் ஐ.நா.சபை வெளியிட்ட ஆவணம் ஒன்று இது தொடர்பிலான பிரகடனத்தை வெளிப்படுத்துகின்றது. "இறைமையுள்ள ஒவ்வொரு அரசாங்கங்களும் அவற்றின் நியாயாதிக்கத்துக்குட்பட்ட பகுதியில் இனப்படுகொலைகள், பாரியளவிலான படுகொலைகள், மிகப் பெரியளவிலான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிலிருந்து தமது பிரஜைகளைப் "பாதுகாப்பதற்கான பொறுப்பைக் கொண்டிருக்க வேண்டும்" என இந்தப் பிரகடனம் தெளிவாக வரையறை செய்கின்றது.
ஆக, ஐ.நா.வின் பிரகடனங்களை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கை அரசு இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. ஐ.நா.சபையின் பிரகடனத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நிலைமையில் சர்வதேச சமூகம் இருக்கின்றது என்பது இதன் மூலம் புலனாகின்றது. ஆனால், இதனை சர்வதேச சமூகம் எவ்வாறு கையாளும் என்பது, இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறவுகள் எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகவே இருக்கும்.
தொடரும்