*புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புத்தான் அரசுக்கு பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத்துறை அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப் பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சியில் நிற்போம். இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார்.
வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது;
"15.03.2007 வட பகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிகளிலும் அதே போன்று மணலாறுப் பகுதியிலும் உக்கிரமான போர் நடக்கின்றது.
இதேபோன்றே, 11.10.2006 ஆம் ஆண்டு கிளாலி, முகமாலை, நாகர் கோவில் பகுதிகளில் படையினர் பாரிய படை நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். ஆனால், இவர்களால் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. மன்னார், மணலாறு, கிளாலி, முகமாலை, நாகர்கோவில் இராணுவத் தளங்களிலிருந்து தொடர்ச்சியாக இராணுவத்தினர் நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படை நகர்வுகளுக்கு நாம் தகுந்த முறையிலும் யுக்திகளின் அடிப்படையிலும் தரைத் தோற்றத்தை நன்கு பயன்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எமது தலைவர் பிரபாகரன் தலைமையில் தளபதிகள், போராளிகள் கடுமையான சமரைத் தொடுத்துள்ளனர்.
மன்னார்
மன்னார் பகுதியை இலக்கு வைக்க படையினருக்கு பல காரணங்கள் உண்டு. அவர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மன்னாரை முற்று முழுதாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் மன்னார் -பூநகரி கரையோரப் பாதையை திறப்பது ஆகியவயே முக்கியமானது.
அதேவேளை, மடுத்தலம் போன்ற அரசியல் ரீதியில் இலாபங்களை தரக்கூடிய இலக்குகளை அடைவதற்கும் அவர்கள் பெரும் பிரயத்தனப் படுகின்றனர். அதற்காகவே படை நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.
ஒரு படை நடவடிக்கையை பெயரிட்டு நடத்தினால் அதற்கு ஒரு எல்லை, இலக்கு, காலவரையறை சொல்ல வேண்டும். அவ்வாறான சூழ்நிலைக்குள் சிக்க அரசு விரும்பவில்லை. அதனாலேயே இவ்வாறான இடங்களில் உக்கிரமான தாக்குதல்களை உச்ச அளவில் படை வலுவை, யுக்திகளை பயன்படுத்தி நடத்துகின்றனர்.
இத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் சொல்லக் கூடியவாறான இடங்களைப் பிடிக்கவோ அல்லது அரசியல் ரீதியாக இலாபம் பெறுவதற்காக மடுத்தலம் போன்ற பிரதேசங்களை கைப்பற்றவோ முயற்சிக்கக் கூடும்.
இவ்வாறான நிலையில் தான் குறித்த இலக்கை குறித்த காலத்துக்குள் அடைய முடியாதென்ற நிலையிலேயே அவர்கள் கால எல்லையை அறிவிக்கவில்லையே தவிர, மன்னார் பெருநிலப்பரப்பை அதன் கரையோரப் பாதைகளை கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டனர்.
இந்நடவடிக்கைக்கு இராணுவத்தினர் உச்ச நிலைத் தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துகின்றது. 57 ஆவது 58 ஆவது படைப் பிரிவுகள் இதனிடையே துணைப் படைப் பிரிவுகள், சிறப்புப் படையணிகள், காவல் படையணிகள், ஆட்லெறிப் படையணிகள் பெருமெடுப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், போர் வருடக் கணக்கில் இழுபடுகிறது.
இந்த தொடர் படை நடவடிக்கையின் விளைவு என்ன? ஒரு வருடமாக தொடரும் இப்போரில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? இதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய அனுமானங்கள் என்ன என்பது தொடர்பாக தற்போது ஆய்வாளர்கள் ஆராயத் தொடங்கி விட்டனர்.
மன்னார் எமது தாய்நிலம். அதற்காக நாம் உக்கிரமாக போரிடுவோம். அரசியல் இலாபங்கள் யாழ். இராணுவத்துக்கான தரைவழிப்பாதை திறப்பு ஆகியவற்றுக்காக படை நடவடிக்கை நடத்தப்படுகின்றது. காலம் செல்லச் செல்ல படையினருக்கு நாம் இப்பகுதிகளை கைப்பற்றுவோமா என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் களச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி முன்னே செல்லுதல் பின்னே செல்லுதல் பக்கவாட்டாக முன்னேற விட்டுத்தாக்குதல், வழிமறித்து அடித்தல், என பல வகை யுக்திகளை நாம் பயன்படுத்துகின்றோம்.
நாளை படையினர் மடுவுக்கு வரலாம். மறுநாள் நாம் மதவாச்சியில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயம். படையினர் முன்னேறும் ஒவ்வொரு அங்குலத்திலும் என்ன இழப்பை சந்திப்பார்கள்? அவ்வாறான இழப்புகளை அவர்கள் உணரும் போது நாம் எவ்வாறான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்து எமது போராளிகள் போரிடுகின்றனர்.
வடபோர் அரங்கிற்கான முக்கிய பின்தளமாக அநுராதபுர படைத்தளமே பயன்படுத்தப்படுகின்றது. இத்தளத்தைப் பயன்படுத்தியே தொடர் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு பல காரணம் உண்டு. ஆழமான பின்புலன்கள் இல்லாத நிலையில் கூட சில அழுத்தமான அரசியல் இங்குள்ளது. குறிப்பிட்ட வெற்றிகளை அடைய முடியாத தாங்கள் ஆரம்பித்த சமர்களை நிறுத்த முடியாத அரசியல் அழுத்தம் அரசுக்குள்ளது. இப்படியான ஒரு இறுக்கப்பாட்டுக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர். மன்னார் களநிலை இது தான்
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் போது போர் என்பது உப தொழிலாகவே இருந்தது. ஆனால், இப்போது அதுதான் முழுத் தொழிலாகவே மாறிவிட்டது. ஆரம்பத்தில் யுத்தத்தில் கால் வைக்கும் போது புலிகளை வெல்வதென்பது இலகுவான விடயமென நினைத்தார் மகிந்த ராஜபக்ஷ. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள், படைத் தளபதிகள் விட்ட அதே வரலாற்றுத் தவறையே மகிந்த ராஜபக்ஷவும் செய்தார்.
முன்னவர்கள் விட்ட அதே விதமான கணிப்பீட்டுத் தவறை, தான் நினைத்ததை அடைந்து விடலாமென்ற எண்ணப்பாட்டுடன் சில கணிப்புகளை வைத்துக் கொண்டு கால எல்லைகளை வெளியில் சொல்லாவிட்டாலும் தன்னகத்தே வைத்துக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அவர்கள் எண்ணிக்கை விளையாட்டுகளையும் காட்டினார்கள்.
புலிகள் தரப்பில் பலநூற்றுக் கணக்கானவர்கள் இறந்து போவதாகவும் தமது தரப்பில் ஓரிருவர் மட்டும் சிறுகாயமடைவதாகவும் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இது அவர்களுக்கு தவிர்க்க முடியாதது. ஏனெனில் புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுவதாகக் காட்டினால் தான் தென்னிலங்கையில் ஏற்படுகின்ற விலைவாசி உயர்வு, ராஜபக்ஷ சகோதரர்கள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி, அது தவிர அரசு எவ்வளவு தூரம் மூடி மறைக்க முற்பட்டாலும் மக்கள் அறிந்துகொள்கின்ற படையினரின் இழப்புத் தொடர்பான செய்தி தொடர்பாக ஏற்படுகின்ற சிக்கல்கள், குழப்பங்களை ஏற்படுவதை திசை திருப்பவே இந்த எண்ணிக்கை விளையாட்டில் அரசு ஈடுபடுகின்றது.
மணலாறு
மன்னாரைப்போலவே மணலாற்றில் படையினர் முன்னேற முயற்சிக்கின்றனர். ஆனால், மணலாறில் எமது வலுவான கட்டமைப்புகள் உள்ளன. மன்னாரைப்போலவே மணலாறும் எமது இதய பூமி. இங்கு எமது படையணிகள் இருவகை சண்டையில் ஈடுபடுகின்றன.
மணலாறு மரபு வழி யுத்தத்திற்கும் ஏற்றது. கெரில்லாப் பணி சண்டைக்கும் ஏற்றது. இதனாலேயே மணலாறில் முன்னேற முடியாமல் திணறுகின்றது.
முகமாலை
வடபோர் முனையைப் பொறுத்தவரை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுகின்றன. இங்கு இராணுவத்தினரால் ஒரு அங்குலம் கூட முன்றே முடியாமல் உள்ளது. தினமும் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் குடாநாட்டில் இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளனர். ஏனெனில், எவ்வேளையிலும் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள், அவர்களின் படையணிகள் இறங்கி வருமென்ற அச்சம் அவர்களுக்குண்டு. இதனால் தான் அவர்களின் மிக நம்பிக்கைக்குரிய 53 ஆவது படைப்பிரிவு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காவல் படையணிகளும் உள்ளன.
விமானப்படைத்தளமும் மிக அருகில் உள்ளது. மிக வேகமான விநியோகத்தை இதன் மூலம் செய்யலாம். காயமடைந்தவர்கள் தொடர்பாக போக்குவரத்து வசதிகளும் உள்ளன. இவ்வளவு வசதிகள் இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது.
போர் முனையில் ஒரு இலக்கின் அடிப்படையிலேயே வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு படையினர் யுத்தத்தை ஆரம்பித்த நாள் முதல் வடபோர் அரங்கில் மறித்து சமராடுதல் என்ற விடயத்தில் நாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றோம்.
கிழக்கு
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்த கதையாக இராணுவத்தின் நிலை வந்துவிட்டது. இதனை சர்வதேச படைத்துறை ஆய்வாளர்கள் கூட கூறத் தொடங்கிவிட்டனர். இராணுவத்தின் போர் யுக்திகளை நம்பி அதிலே தமது முதலீடுகளை செய்தவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். இதன் அங்கமாகத்தான் ஜனாதிபதியோ, இராணுவத் தளபதியோ நினைத்ததுபோல் புலிகளை வெல்ல முடியாது. அவர்களை வெல்வதற்கு கால எல்லையும் கூறமுடியாதென கூறத்தொடங்கியுள்ளனர்.
கிழக்கைப் பொறுத்தவரை எங்களுடைய தேவை போரிடுதலுக்கான எமது வீச்சு, அந்த அளவு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலிருந்து இயன்ற அளவிலான ஒரு போரினை நாம் செய்கின்றோம். இதனால், அங்கே படைகளை நிறுத்த வேண்டிய தேவை அரசுக்கேற்பட்டுள்ளது.
படைகளை அங்கிருந்து அகற்றும்போது அதற்குப் பதிலாக புதிய படையணிகளை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கேற்பட்டுள்ளது. ஏனெனில், கிழக்கைத் தாண்டிய இடங்களிலும் களங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புத்தான் இன்று அரசுக்குப் பாரிய அரசியல், இராஜதந்திர, படைத்துறை, பொருளாதார அழுத்தத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வாறான முக்கிய தருணத்திலேதான் களமுனை எங்களுக்கு சாதகமாக திரும்பி வருகின்றது.
எமது தாக்குதலின் வீச்சு எப்படி இருக்குமென்பதை இராணுவத்தினர் பல தடவைகள் அறிந்துள்ளனர். உதாரணமாக, அநுராதபுரம் விமானப்படைத்தளம், கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீதான எமது தாக்குதல்கள் ஒருவகை, ஓயாத அலைகள், இன்னொரு வகை. உலக நாடுகளுக்கு எமது படை வலுச்சமநிலையை நிரூபித்த ்அக்னிகீலவுக்குீ எதிரான எமது சமர் இன்னொரு வகையாக அமைந்திருந்தது.
இவ்வாறான ஒரு யதார்த்தம் இருக்கும்போது, இவ்வாறான தாக்குதல்களை நடத்தக்கூடிய ஆற்றல்களைப் புலிகள் இழந்துவிடவில்லையென்பதற்கான பாரிய யதார்த்த நிலையை சர்வதேச ஆய்வாளர்கள் இலங்கை அரசிற்கு இடித்துரைக்கத் தொடங்கியுள்ளனர். புலிகளின் தாக்குதல் திறனில் ஏதாவது மாற்றத்தை கொண்டுவரக்கூடிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளீர்களா என்பதே அவர்களின் கேள்வி.
முல்லைத்தீவில் நடந்த கரும்புலித் தாக்குதல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற கரும்புலித் தாக்குதல் குறித்து விரிவாக என்னால் கூறமுடியாது. ஆனால், இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள விளைவு பாரியது. குடாநாட்டு இராணுவத்திற்கான படை விநியோகம் இந்த குறிப்பிட்ட பாதையால் தான் செல்ல வேண்டும். ஆனால், இந்த பாதையை நாம் இப்போது எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
அரசின் கடல் இறைமை என்ற விடயத்தை எமது கரும்புலிகள் மீண்டும் சவாலுக்குட்படுத்தியுள்ளனர். இலங்கை அரசின் கடல் இறைமை என்பது சர்வதேச ரீதியாக கேள்விக்குரிய விடயமாக முக்கியத்துவமிழந்து வரும் விடயமாக மாறியுள்ளது.
எமது படைபலத்தை விட அரசின் படைபலம் பாரியது. ஆனால், எம்மிடமுள்ள மனோபலம் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு யுத்தத்தில் மந்த நிலை ஏற்படுவதற்கு காரணம், அவர்களிடம் யுத்தம் செய்வதற்கான தார்மீகம் இல்லையென்பதே ஆகும்.
தற்போது இராணுவத்தினர் இலக்குத் தெரியாமலுள்ளனர். மன அழுத்தம், விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாங்கள் செய்யும் பணியில் நம்பிக்கை இழந்துள்ளனர். அரசு மறைக்கும் இராணுவ இழப்புகளை தென்னிலங்கை ஊடகங்கள் வெளிக்கொண்டுவருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், அவர்களின் மன உறுதி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறுகிறது.
கிழக்கில் படைவிரிவாக்கம் செய்துள்ளார்கள். அதற்கு நாம் அவர்களை நிர்ப்பந்தித்துள்ளோம். படை விரிவாக்கத்தை தடுக்க முடியுமா என்பது அவர்களின் கைகளில் இல்லை. எமக்கு சாதகமான நிலை வரும்போது அங்குள்ள படைச் சமநிலையில் மாற்றம் ஏற்படும்.
அதிரடிப்படை விலகல்
விசேட அதிரடிப்படை என்பது மரபுக் கட்டமைப்பு அல்ல. தனது இனவிரோத உச்சக் கட்டமாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனை உருவாக்கினார். இனப்படுகொலை செய்வதற்கே இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. உடும்பன்குளம், கொக்கட்டிச்சோலை படுகொலைகளை உதாரணமாகக் கூறலாம். அத்துடன், கிழக்கில் அன்றாடம் 1,2,3,4,என இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.