* பிள்ளையான், ஹிஸ்புல்லாவை வைத்து நாடகம்; சாடுகிறது ஜே.வி.பி.
டிட்டோகுகன்
நடைபெற்று முடிவடைந்த கிழக்கு மாகாண சபைக்கான வாக்களிப்பானது தேர்தலாகவே இருக்கவில்லையென தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., இந்தத் தேர்தல் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பேதங்களை ஏற்படுத்தி இனநெருக்கடியை உருவாக்கிவிடும் சூழலையே அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதுடன், விடுதலைப் புலிகளிடமிருந்து படையினரால் மீட்டெடுக்கப்பட்ட கிழக்கை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் தள்ளி விடுவதற்கான கதவைத் திறந்து விட்டிருப்பதாகவும் சாடியுள்ளது.
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜே.வி.பி. நேற்று திங்கட்கிழமை நாவலையிலுள்ள ஷோலிஸ் சிற்ருண்டிசாலையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
கடந்த 20 வருடங்களாக விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து படையினரால் மீட்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலானது மிக முக்கியமான தேர்தலாக இருந்திருக்க வேண்டும். அப்பிரதேச மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டியது முக்கியம். படிப்படியாக அதை செய்ய வேண்டும்.
அதற்கு அம்மக்களுக்கு எமது நாட்டிலுள்ள ஜனநாயக உரிமைகளை வழங்கி, அவர்களுக்குரிய பிரதிநிதிகளை அவர்களாக தெரிவு செய்யும் உரிமைகளையும் கருத்து சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைப் புறக்கணித்து செயற்பட்டால் கிழக்கு மக்கள் மீண்டும் புலிகளுக்கு தலைவணங்கும் நிலைமையே உருவாகும்.
1981 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிகாலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு யாழ்.நூலகத் தீ வைப்பு போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபட்டதினால் இளைஞர்கள் ஏதாவதொரு ஆயுதக் குழுக்களில் சேர்ந்தனர். இதேபோல் தான் அரசாங்க அமைச்சர்கள் இன்றும் அத்துமீறி செயற்பட்டிருக்கின்றனர். எமது நாட்டின் வரலாற்றில் இவ்வாறு பல உதாரணங்கள் இருக்கின்றன.
கிழக்கு மாகாணத் தேர்தலை பொறுத்த வரையில் அரசாங்கம் தனது குறுகிய இலாபத்துக்காக செயற்பட்டுள்ளது. புலிகளை விரட்டி படையினர் கிழக்கை மீட்டதன் பின்னர் அங்குள்ள இளைஞர், யுவதிகளின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு அதை செய்யவில்லை. தங்களது பிரதிநிதிகளை சுதந்திரமாக தெரிவு செய்ய அனுமதிக்கவில்லை. இதன் பிரதிபலன் எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.
எனவே, அரசாங்கம் தனது குறுகிய இலாபத்துக்காக செய்த ஜனநாயகத் துரோக நடவடிக்கைகளை ஜே.வி.பி. வன்மையாகக் கண்டிக்கிறது. கிழக்கு மாகாண சபைக்கென அரசின் தேர்தல் பிரவேசமே ஜனநாயக விரோதமானதாகும். ஏனெனில் அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே ஆயுத குழுவொன்றுடன் கூட்டணியைப் பேணி வந்திருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களிலும் வாக்கு மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இரவோடு இரவாக வாக்குச் சீட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் நாகஸ்வெவ மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி போன்ற பகுதிகளில் கிராம சேவகர்களை அருகில் வைத்துக் கொண்டு கணினி மூலம் வாக்காளர் பட்டியலிலுள்ள பெயர்களைக் கொண்டு உடனடி அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு, கிராம சேவகரினால் உறுதிப்படுத்தப்பட்டு வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான மோசடிகள் அனைத்தும் ஆயுதங்களைக் கொண்டு அழுத்தம் கொடுத்தே செய்விக்கப்பட்டிருக்கின்றன.
மதியம் 12 மணிக்கு பின்னரே கள்ள வாக்குகள் போட ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், கல்குடா, காத்தான்குடி போன்ற பகுதிகளில் பிற்பகல் 2 மணியின் பின்னர் அடையாள அட்டைகளின்றியும் வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தேர்தல் மூலமான இவ்வாறான செயற்பாடுகளினூடாக அரசாங்கம், புலிகளிடமிருந்து படையினர் மீட்டெடுத்த கிழக்கை மீண்டும் பயங்கரவாதத்தின் கைகளில் தள்ளி விடுவதற்கான கதவை திறந்திருக்கிறது .
அத்துடன், இந்தத் தேர்தலானது தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன பேதத்தை கட்டியெழுப்புவதாக அமைந்து விட்டது. அதை உறுதிபடுத்துவது போல் முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கம் பிள்ளையான், ஹிஸ்புல்லா என இருவரை வைத்து நாடகமாடுகிறது. இது தேர்தலாகவே இல்லை. அதற்கு பதிலாக இந்தத் தேர்தல் மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் சுமுகமாக வாழ முடியாமல் பேதங்களை ஏற்படுத்தும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இது நாடும் மக்களும் தோல்வி கண்ட தேர்தல். இனவாதத்தைக் கட்டியெழுப்பும் தேர்தல் என்றார்.