* அகதிகளின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவலம்
வன்னியில் இடம்பெற்று வரும் படைநடவடிக்கைகளால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக் கணக்கானோரின் பத்துவீதத் தேவையே பூர்த்தி செய்யக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் கடந்த ஒன்றரை வருடமாக இடம்பெற்று வரும் படைநடவடிக்கையால் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
மக்கள் இடம்பெயரும் வேகத்திற்கேற்ப அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, வன்னிக்கு வெளியே இருந்து கிடைக்கும் உதவிகளுக்காக காத்திருக்க வேண்டியிருப்பதாக அரச அதிகாரிகளும் நிவாரணப் பணியாளர்களும் கூறுகின்றனர்.
தற்போது வன்னியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே ஒரு லட் சத்து 75,000 க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 1,32,998 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களது அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பாக ஆராய்வதற்கான உயர்மட்டக் கூட்டமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திருமுறுகண்டியில் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் குறித்தும் ஆராயப்பட்ட இந்தக் கூட்டத்தில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா.முகவர்கள், உள்ளூர் தொண்டர் அமைப்புகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தற்போதைய நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் அதிகமாயிருப்பதாலும் கிடைக்கும் உதவிகள் மிகவும் போதாதிருப்பதாலும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
தற்காலிக கொட்டில்கள் அமைத்தல், சமைத்த மற்றும் உலருணவுப் பொருட்களை வழங்குதல், உணவல்லாத அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், சுகாதார சேவைகள், பாடசாலைகளில் இருப்போரை தற்காலிக கொட்டில்களுக்கு மாற்றி பாடசாலைகளை இயங்கச் செய்தல், கற்றலுக்குரிய உபகரணங்களை வழங்குதல் என்பன உட்பட பல்வேறு தேவைகள் குறித்தும் அதற்கான வழங்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
எனினும், பாரிய இடப்பெயர்வால் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும் மிகக் குறைந்தளவு உதவிகளே வழங்குவதற்குரிய இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் இந்த கூட்டத்திற்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
மழைகாலம் ஆரம்பமாவதால் உடனடியாக இருப்பிடத் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மிக மோசமான சுகாதாரப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பொது இடங்கள் மற்றும் மரங்களின் கீழ் வசிப்போருக்கான சுமார் 7000 தற்காலிக கொட்டில்கள் உடனடியாகத் தேவைப்படுகிறது. எனினும் இதில் பத்து வீதமானவற்றையே வழங்கக் கூடிய நிலைமையே வன்னியிலுள்ளது.
இதுபோன்றே இடம்பெயர்ந்தோரின் தேவைகளை பத்துவீதமே பூர்த்தி செய்யக்கூடிய நிலையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழமை நிலையிலேயே வன்னியில் மாரிகாலத்தில் மிக மோசமான சுகாதாரப் பிரச்சினைகள் நிலவும் நிலையில், தற்போது பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து இருப்பிடவசதியற்று இருக்கையில் மழைகாலம் தொடங்கி விட்டால் மேலும் மோசமான நிலையேற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.