* இருப்பதா? வருவதா? தீர்மானிப்பது மக்களின் பொறுப்பு; அமைச்சர் சமரசிங்க
-டிட்டோ குகன்-
வன்னியிலுள்ள மக்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசமான வவுனியாவுக்கு வருமாறு அறிவுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவ்வாறாக எவரும் வவுனியாவுக்கு வரவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வன்னியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வவுனியாவுக்கு இடம்பெயர்வதற்கான "மனிதாபிமான பாதை' குறித்த அறிவுறுத்தல்களுடனான துண்டுப் பிரசுரங்கள் வெகு விரைவில் உரிய நேரத்தில் வன்னி மக்களுக்கு போடப்படும் என்றும் அரசாங்கம் சுட்டிக் காட்டுகிறது.
கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அரசாங்கம் சார்பாக இந்த கருத்துகள் வெளியிடப்பட்டன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வன்னியிலிருந்து வெளியேறும் மக்களுக்கு வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சகல தங்குமிட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, வன்னியிலுள்ள மக்களை வவுனியாவுக்கு வருமாறு விமானங்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான எத்தனை பேர் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளனரென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க;
"அப்படியான எவரும் இதுவரை வரவில்லை, வவுனியாவின் நிலைமைகள் இன்னும் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு ஒன்றுமில்லை என்றார்.
அத்துடன், வவுனியாவுக்கு வருவதா இல்லை. வன்னியிலேயே இருப்பதா என்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதேநேரம், படையினரின் தாக்குதலால் வன்னியில் மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில்;
"வன்னியிலுள்ளவர்களும் எமது மக்கள் தான். நாம் அவர்களைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் ஒருபோதும் அப்படி செய்யாதென அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் சஹீர் விளக்கமளிக்கையில்;
"ஏற்கனவே, மக்களை வெளியேறி வவுனியாவுக்கு வருமாறு, வன்னிப் பகுதிக்குள் விமானங்கள் மூலம் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து, மீண்டும், மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வவுனியாவுக்கு வருவதற்கான மனிதாபிமான பாதை குறித்த துண்டுப் பிரசுரங்கள் உரிய தருணத்தில் விநியோகிக்கப்படும். அதற்கான காலத்தை வெளியிட்டு விட்டால் விடுதலைப்புலிகள் அதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும்' என்றார்.
இதேநேரம், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் படை நடவடிக்கைகளின் போது, பொது மக்களுக்கான சேதம் மிகக் குறைவாகவே இருப்பதாக அரச சமாதான செயலகப் பணிப்பாளரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.
"உயிரிழப்புகளை ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. எனினும், இலங்கையில் படை நடவடிக்கைகளின் போது, பொது மக்கள் சேதம் குறைவாகவே காணப்படுகிறது. படை நடவடிக்கையில் வெற்றி என்பதைவிட, பொது மக்களுக்கு பாதிப்பில்லை என்பதே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம்' என அவர் மேலும் கூறினார்.