* வடமத்தி, சப்ரகமுவ முதலமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி
-டிட்டோகுகன்-
வடக்கில் விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபை ஸ்தாபிக்கப்படுமெனவும் அரசியல் நிர்வாகம் ஏற்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பின்னர் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆவது மாகாண சபை நீண்ட காலம் செல்வதற்குள் ஸ்தாபிக்கப்படுமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் அப் பிரதேசங்களின் மக்கள் அரசாங்கம் செல்லும் பாதை தெளிவானதென எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே, எமது பயணத்தை மேலும் பலத்துடன் முன்னெடுத்துச் செல்ல முடியுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது, இந்த வெற்றியை சகித்துக் கொள்ள முடியவில்லை. தோல்வியுற்றதும் அந்தக் கட்சிக்காரர்கள் எதை எதையோ கூறி புலம்புகிறார்கள். எனினும் இந்தத் தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
விருப்பு வாக்கு தேர்தல் முறைமையில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, இந்த முறைமை தொடர்பாக நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் முறைமை தொடர்பாக ஆராய விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டை ஐக்கியப்படுத்த நாம் பெரும் போராட்டத்தை நடத்துகிறோம். இம் மாதிரியானதொரு சந்தர்ப்பத்தில் கட்சிகளுக்கிடையே முரண்பட்டுக்கொள்வதில் பலனில்லை. நாம் ஒருவருக்கொருவர் முரண்பட்டு, பிளவுபட்டு நின்றது போதும். எனவே, தேர்தல் காலத்தில் இருந்த போட்டி மனப்பான்மையை மறந்து, நாட்டையும், பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணங்களையும் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும்.
இன்று எவ்வளவு செய்தாலும் அவற்றை விமர்சிப்பதற்கென்றால் பலரும் இருக்கின்றனர். செய்யாததொன்றை தேடிப் பிடித்து, குறை சொல்வார்கள். அதைக் கண்டு சலிப்படைந்து விடக்கூடாது. அந்தக் குறைபாடுகளை காண்பிப்பது கடமையென நினைத்துக் கொண்டு நாம் அவற்றைப் பூர்த்தி செய்து, கொடுக்க வேண்டும்.
மக்களின் மத்தியில் சென்று பணியாற்றும் போது மட்டுமே தேர்தலுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும். நாம் மக்கள் மத்தியில் இருந்தால் இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நாம், கிழக்கு மாகாணத்தை வெற்றி பெற்று அங்குள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்கினோம். பல வருடங்களாக பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு அடிமைப் படுத்தப்பட்டிருந்த மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தோம். கிழக்கைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டு அங்கு மாகாண சபையையும் ஸ்தாபித்தோம். இதேபோல் 9 ஆவது மாகாண சபையையும் வெகு காலம் செல்வதற்குள் நாம் ஸ்தாபிப்போம்.
அதற்காக எமது படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து போராடி வருகின்றனர். மக்களும் இந்த நாட்டைப் பற்றி சிந்தித்து, எப்போதும் வாக்களித்துள்ளனர். அந்த மக்களை நாம் கௌரவப்படுத்த வேண்டும். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அந்தப் பயணத்தைப் பொறுப்புடன் மேற்கொள்ளும் கடமை எமக்குள்ளது. இதற்கு மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் ஒருமித்து செயற்பட வேண்டியுள்ளது.
நாட்டில் பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டால் நாடு வீழ்ச்சி கண்டுவிடும். நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் மற்றும் நீதிமன்றத்துக்கும் இடையில் தொடர்பொன்று இருத்தல் அவசியம்.
நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அதேபோல், பாராளுமன்றத்தின் பொறுப்புகளுக்கும் நாம் மதிப்பளிக்கிறோம். நாம் எப்போதுமே நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுகிறோம். நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பில் நாம் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதில்லை. எந்தவொரு விடயமாவது நீதிமன்ற விசாரணையின் கீழ் இருக்கும் போது, நாம் அது பற்றிப் பாராளுமன்றத்தில் விவாதிப்பதில்லை.
அரசொன்றை கட்டியெழுப்ப நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்றுக்கும் இடையில் சிறந்த தொடர்பொன்று இருக்க வேண்டுமென நாம் நம்புகிறோம்' என்றும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இந்த வைபவத்தில் வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சராக பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவும் சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.