எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,தொழிலாளர் விடுதலை முன்னணி,மலையக தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று வியாழக்கிழமை காலை 10.24 மணிக்கு நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் டி.பி.ஜி.குமாரசிறியிடம் தலைமை வேட்பாளரான முன்னாள் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க கையளித்தார்.
வேட்பு மனு கையளிப்பின்போது முன்னாள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி,முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க,மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன்,வேட்பாளரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரை ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன்,நுவரெலியா ரோட்டறிக் கழகத் தலைவரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரை,தொழிலாளர் விடுதலை முன்னணி பிரதிநிதியாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சருமான எஸ்.அருள்சாமி,மலையக தேசியத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியாக முன்னாள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களுடன் முன்னாள் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான குமார் திஸாநாயக்க,நிமால் பியதிஸ்ஸ,முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் ஜே.எம்.சீ.ஜயசேகர ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இம்மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 4 இலட்சத்து 57 ஆயிரத்து 337 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.ஐக்கிய தேசியக் கட்சி இம்மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.