தேர்தலை மும்முனைப் போட்டியாக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்பேசும் மக்களின் கட்சிகளையும் அமைப்புகளையும் கூறுபோட்டுள்ளதாகவும் குறிப்பாக மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முற்பட்டுள்ளதாகவும் ஜனநாயக தேசியக் கூட்டணி சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் கிட்ணன் செல்வராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்து சுயநல வேட்பாளர்களை நிராகரித்து மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய வேட்பாளர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த ஜனாதிபதித் தேர்தல் அரசாங்கத்துக்கும் எதிரணிக்குமிடையிலான போட்டியாக அமைந்ததால் இருமுனைப் போட்டியாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுத் தேர்தலில் எதிரணியின் கூட்டமைப்பிலிருந்து விலகி யானைச் சின்னத்தில் போட்டியிடுவதால் இத்தேர்தல் மும்முனைப் போட்டியாகவுள்ளது. இதனால், தமிழ் பேசும் மக்களின் கட்சிகளையும் அமைப்புகளையும் பிரித்து தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது.
தோட்டப் பகுதிகளை இலக்கு வைத்துத் தமிழ் வேட்பாளர்கள் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர். இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பாராளுமன்றம் சென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து சுகபோகங்களை அனுபவிக்கத் திட்டமிட்டுள்ளனர். அரசிலிருந்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிக்கு வந்தவர்கள் ஐ.தே.க.மூலம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசு பக்கம் சாய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
தோட்டப்புற மக்கள் யானையென்ற சிந்தனையிலேயே தேர்தலில் பின்பற்றுவதால் இவர்கள் யானையில் போட்டியிடுகின்றனர்.
கடந்த காலத்தில் யானையில் போட்டியிட்டவர்கள் அரசு பக்கம் தாவி சுகபோகங்களை அனுபவித்தனர். சூழ்நிலைக்கு ஏற்ப மக்களை ஏமாற்றும் தந்திரத்தைப் பிரயோகிக்கும் சுயநலவாதிகளை இனங்கண்டு சிந்தித்து வாக்களிக்குமாறு கோருகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சி ஜெனரல் சரத் பொன்சேகாவை இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிட்டு அன்னத்துக்கு வாக்களித்த மக்களை அபகீர்த்திக்குள் தள்ளியுள்ளது. இந்நிலையிலேயே அனைத்து மக்களுக்கும் சம உரிமையென்ற ஒரே கொள்கையின் கீழ் செயற்படும் ஜே.வி.பி. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டுவரவே ஐ.தே.க.வுடன் இணைந்து பொது வேட்பாளரை ஆதரித்தோம். ஐ.தே.க.வின் செயற்பாட்டால் அன்னத்துக்கு வாக்களிக்கும் மக்களுக்கு கௌரவத்தை ஏற்படுத்த நாம் வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு வாக்களித்துத் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துத் தமிழ் மக்களின் குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய முன்வர வேண்டுமெனக் கோருகின்றேன்.
கடந்த காலத்தில் பொது வேட்பாளருக்காகப் பணியாற்றிய ஐ.தே.க. வினர் தற்போது அரசுக்கு ஆதரவளிக்கும் மறைமுகச் செயற்பாட்டில் இறங்கியுள்ளனர். குறிப்பாக பதுளை வாழ்மக்கள் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் மூன்று தமிழ் வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கோருகின்றேன்.