
பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் 225 எம்.பி.க்களைத் தெரிவு செய்வதற்கானப் போட்டிக்களத்தில் 323 அரசியல் கட்சிகளையும் 312 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 7686 போட்டியாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.தேர்தல் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வது நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும் 18 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 858 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 324 பேர் களம் இறங்கியுள்ளனர். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 16 கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 270 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 17 கட்சிகளும் 14 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. 217 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 360 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 18 கட்சிகளும் 48 சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ள நிலையில், 660 வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 338 பேர் களம் இறங்கியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் 300 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கண்டியில் 14 கட்சிகள் 17 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 465 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
பதுளையில் 12 கட்சிகளும் 05 சுயேச்சைக்குழுக்களும் 187 பேரை நிறுத்தியுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் 319 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் 388 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன.கம்பஹா மாவட்டத்தில் 14 கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களும் 699 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் 468 பேரை களமிறக்கியுள்ளன.தேர்தல் தினத்தில் 65 ஆயிரம்பொலிஸார் கடமையில் ஈடுபடுவர்
பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் ஏப்ரல் 08 இல் வாக்களிப்பு நிலையங்களினதும் மாவட்டச் செயலகங்களினதும் பாதுகாப்புப் பணியில் 65 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர்.சகல மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவான முறையில் மேற்கொள்ளப்படும். தேர்தல் பிரசாரத்தின்போது ஆயுதப்படைகளின் ஒத்துழைப்புடன் பொலிஸார் பணியில் ஈடுபடுவர் என்று பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.இதேவேளை,பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் சீருடையில் பணியாற்ற வேண்டும் என்று முதற்தடவையாக பொலிஸ் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. சாதாரண பொதுமக்களிடமிருந்து இலகுவாக அடையாளப்படுத்துவதற்காக சீருடையில் கடமையாற்றுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.சில பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடை யுடன் காணப்படுவதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்தே பொலிஸ் திணைக்களம் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகப் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.