09/03/2010
Hot News

சவூதிக்கு ஹஜ் யாத்திரை சென்ற நால்வர் பன்றிக் காய்ச்சலால் மரணம்

 ரியாத்: இவ்வருடம் மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்தவர்களில் நான்கு யாத்திரிகர்கள் பன்றிக் காய்ச்சலால் மரணமடைந்துள்ளதாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொரோக்காவைச் சேர்ந்த பெண்ணொருவரும் சூடான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு ஆண்களும் தமது 70 வயதுகளில் உயிரிழந்திருப்பதாகவும் நைஜீரியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுமி தனது 17 ஆவது வயதில் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நால்வரும் பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கெதிரான தடுப்பு மருந்தை ஏற்றியிருக்கவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் தொகை 6750 ஐ எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. யாத்திரையின் போது பலியானவர்களில் மூவர் மதீனாவிலும் ஒருவர் மக்காவிலும் உயிரிழந்துள்ளனர்.

வருடாந்தம் சுமார் 30 இலட்சம் பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்று வரும் அதேவேளை, இவ்வருடம் பன்றிக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. விமான நிலையங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான கமராக்கள் பொருத்தப்பட்டு ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தி இவ் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை சவூதி அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தடுப்பு மருந்து ஏற்றப்பட்டமைக்கான சான்றிதழையும் சமர்ப்பிக்குமாறு சவூதி அரசாங்கம் கோரியிருந்தது. இந்நிலையில், மேலும் 16 பேரில் இவ்வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவர்களில் நான்குபேரின் நிலை ஆபத்தானதாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பி.பி.சி.

 
Foreign News
 
Current News
Sports News
Indian News
Parliament